Friday 16 July, 2010

மதராசபட்டினம்

இது விஜயின் படம் என்பதால் ஒரு முறை பார்க்கலாம் என்று சென்றேன் (என்ன.. ஒரு மாதிரி பாக்குறீங்க...  இவரு அவரில்லிங்க ...  பக்கத்தில இருக்க படத்த வேணா பாருங்க) கிரீடம் மற்றும் பொய் சொல்ல போறோம் இரண்டும் மிக வித்தியாசமான திரைப்படங்கள் அதிலிருந்தும் மிகவும் வித்தியாசமான முயற்சி (எப்படி என்று பின்னல் பார்க்கலாம் படிக்கலாம்) இந்த மதராசபட்டினம். 1945 சென்னை இல் நடக்கும் ஒரு காதல் கதை. கவர்னர் மகள் எமியும் மல்லியுத்த வீரனான சலவை தொழிலாளி பரிதியும் காதலிப்பதால் என்ன நடந்தது என்பதே கதை. படம் நிகழ்கால லண்டனில் 80 வயது எமி பாட்டியுடம் ஆரம்பிக்கிறது. உடல் நலக்குறைவால் வாடும் எமி இறப்பதற்கு முன் இந்தியாவில் தனக்கு ஒரு கடமை பாக்கியிருப்பதாய் கூறி சென்னை வருகிறார். அவரின் கடந்தகாலமாக படம்  விரிகிறது. சென்னையை மதராசபட்டினமாக காட்ட ஒரு பெரிய அணியே கடுமையாக உழைத்திருக்கிறது. அதற்கு தலைமை தாங்கிய செல்வகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பரிதியாக ஆர்யாவும் மொழிபெயர்பாளராக, ஹனிபாவும் அட்டகாசமாக நடித்திருக்கிறார்கள், எமியாக வரும் எமி ஜாக்சன் (மிஸ் டீன்) படம் முழுவதும் அழகாகவே தோன்றுகிறார். இனிமே அவர் தமிழ் படங்களில் நடிப்பாரா என்று தெரியவில்லை (நாம கொடுத்துவச்சது அவ்வளவுதான்).  பில்லாவாக இருந்தாலும், தூம்மாக இருந்தாலும், தமிழ் படமாக இருந்தாலும், மதராசபட்டினம்மாக இருந்தாலும் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு சிறப்பாகவே இருந்தது, இருக்கின்றது, இருக்கும். பின்னணி இசை சில சமயம் அதிர்கிறது சிலசமயம் அதிரவைக்கிறது ஜி வி பிரகாஷ் இன்னும் முயற்சித்திருக்கலாம். இரண்டு பாடல்கள் இனிமை. முதல் பாதி முழுவதும் சின்னச்சின்ன காட்சிகளாலும் இயல்பான வசனங்களாலும் அலங்கரிக்கப்படுள்ளது. இரண்டாம் பாதி ஏனோ இழுத்தடிக்கப்பட்டுள்ளது. பரிதி என்ன ஆனார் என்று அனைவருக்கும் தெரிந்த போதும் அதை காட்ட தாமதித்தது எருச்சல். 1945 ல் கதை நடந்தும் கதாநாயகன் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடாதது நிம்மதி அளிக்கிறது ஆனால் அதை தவிர பல கிலீசேக்கள் (இதற்கு தமிழ் வார்த்தை தெரிந்தால் கூறவும்) உள்ளன. விஜய் சிறைச்சாலை இயக்கிய பிரியதர்சனின் மாணவராம் விஜய் ஆனால் சிறைச்சாலையையும் இதையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது கூடாது. கதையை மட்டுமே ரீமேக்கிகொண்டிருந்த கோடம்பாக்கத்தில் திரைக்கதையையும்  ரீமேக்கலாம் என்று எடுத்துக்கட்டியுள்ளார் விஜய். படம் முடிந்ததும் Titanic என்றும் lagaan என்றும் காதில் ஒலித்தது. அவ்விரு படங்களுக்கும் இதன் கதைக்கும் சம்பந்தமேயில்லை என்றாலும் முக்கால்வாசி காட்சியமைப்பு அந்த படங்களிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது மீதி கால்வாசி வேறு படங்கள். இதனால் சின்ன சின்ன திருப்பங்களும் 5 நிமிடம் முன்பே அனைவரும் ஊகித்துவிடுகின்றனர். யதார்தமான நகைச்சுவைவே படம் முழுவதும் நம்மை உட்காரவைத்திருக்கிறது. Titanic என்றும் lagaan என்றும் கூறியவர்கள் அனைவரும் அதற்கு பல ஆண்டுகள் முன்பே திரைக்கு வந்த இந்தக்கதைக்கு மிகவும் ஒற்றுமையுள்ள பாரதிராஜாவின் நாடோடி தென்றலை மறந்தது வருத்தமளிக்கின்றது. பழைய மதராசுக்காகவும் புதிய எமிக்காகவும் ஒருமுறை இப்படத்தை அனைவரும் கண்டிப்பாக பார்க்கவும்.

Sunday 20 June, 2010

ராவணன்



அசோகவனம் என்று அராம்பித்து ராவணன் என்று தமிழிலும் ராவன் என்று ஹிந்தியிலும் வெளியாகியிருக்கும் திரைப்படம். ஏழு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியிருக்கும் மணிரத்தினத்தின் தமிழ் திரைப்படம் என்ற ஒரு காரணமே போதும் படத்தை முதல் நாள் பார்பதற்கு. கடைசியாக நான் பில்லா திரைப்படத்தை முதல் நாள் பார்த்தேன் (பார்க்க மட்டுமே முடிந்தது கேட்க முடியவில்லை எனவே பயந்து கொண்டேதான் சென்றேன் ). படம் ஆரம்பித்ததும் விசில் பறந்தது அனால்  சிலநிமிடங்களிலேயே அரங்கம் முழுவதும் அமைதி ஆனது ( இதை கின்னசில் பதியலாம்). படம்  முதல் frameலேயே கதைக்குள் நுழைந்தது.

 திருநெல்வேலியில் உள்ள ஒரு தாதா வீராவை பிடிக்க நினைக்கும் போலீஸ் அதிகாரி தேவ், வீராவின் தங்கையின் கல்யாணத்தில் புகுந்து வீராவை பிடிக்க நினைக்கிறார். வீரா தப்பிவிடுகிறான் அவன் தங்கை போலீசில் மாட்டி சீரழிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். பழி வாங்க தேவின் மனைவி ராகினியை கடத்தி வரும் வீரா, அவர்களை தேடி படையோடு வரும் தேவ், காட்டிற்குள் என்ன ஆனார்கள் என்பதே கதை. ராகினி வீராவை தவறாக எண்ணி பின் அவன் நியாயங்களை உணர்ந்து பின் யார் நல்லவர் யார் தீயவர் என்று புரியாமல் குழம்புகிறார். 

வீராவாக விக்ரம், தேவாக ப்ரித்வி, ராகினியாக ஐஸ்வர்யா ராய் மேலும் பிரபு, கார்த்திக், ப்ரியாமணி என்று நீள்கிறது நட்சத்திர பட்டியல். படத்தில் அனைவரும் தங்கள் பங்கை மிக சிறப்பாகவே செய்துள்ளனர். படத்தில் மிகவும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருப்பது சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு. இரு படகுகள் மோதுவதை நீருக்கு அடியிலிருந்து காட்டி இங்கெல்லாமா காமெராவை வைக்க முடியும் என்று நம்மை வியக்க வைக்கிறார்  மற்றும் பெரும்பாலான sceneகளில் subjectடை out of focusஸில் வைத்து வேறு பொருளை focus செய்திருப்பதும் மிக வித்தியாசமான முயற்சி. மணிரத்தினத்தின் திரைக்கதையையும் ரஹ்மானின் இசையையும் பற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை.

இசை, நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு என்று அனைத்தும் நன்றாக இருக்கும் பொழுதும் எதோ ஒன்று குறைகிறது. இக்கதையை தூக்கத்தில் இருக்கும் குழந்தை கூட சொல்லிவிடும் இது ராமாயணம் என்று, ஆனால் அதை மக்களுக்கு விளக்க ஏன் பகீரதப்பிரயத்தினம் செய்கின்றனர் என்று புரியவில்லை. தளபதி படத்தில் அதை மகாபாரதம் என்று யாரும் விளக்கவில்லையே மேலும் இப்படத்தின் பெயரே போதுமே. படத்தில் அனைவரும் 10 தலை என்றும் 14 நாள் கடத்தல் என்று கூறுகிறனர். படத்தில் எத்தனை 10 தலை மற்றும் 14 நாள் வருக்கிறது என்று கூறுபவர்களுக்கு தங்க காசு பரிசு அளிப்பார்கள் போல. கார்த்திக் செய்யும் குரங்கு சேட்டைகளை பார்க்கையில் இது மணிரத்தினத்தின் திரைப்படமா என்று எண்ண வைக்கிறது. சுகாசினியின் வசனம் படம் பார்பவர்களை  முட்டாள்களாக கருதி அனைத்தையும் விளக்கி கொண்டே செல்கிறது. வீரா ராகினியை கடத்தும் இடத்தில வரும் கழுகை (ஜடாயு) காட்டியது சிறந்த திரைக்கதை அமைப்பு ஆனால் அதை மிஞ்சி விடுகிறது வளவளா வசனம். 

கோர காட்சிகளையும் கொடூரங்களையும் காட்ட பல வாய்ப்பிருந்தும் தவிர்த்து எளிமையாய் காட்டியிருப்பது மணிரத்தினத்திடம் பிற இயக்குனர்கள் கற்க வேண்டிய பாடம். மிக சிறந்த திரைப்படம் ஆக அனைத்து தகுதி இருந்தும் எதோ missing . அந்த எதோ சுஜாதா.  

Friday 9 April, 2010

கடவுள்

நான் கடந்த இரு மாதங்களில் படித்த (அல்லது படிக்க முயற்சித்த) புத்தகங்கள் GOD 's Debris , The Brief History of Time , விவிலியம் (ஐந்து பக்கங்கள் மட்டும்). மூன்றுக்கும் உள்ள ஒற்றுமை கடவுள் தேடல் , வேற்றுமை வெவ்வேறு வழிகள் (நான் வழிகள் என்று மதங்களை குறிப்பிடவில்லை).

முதலில் விவிலியம் , நான் விவிலியம் படிக்க காரணம் எனது ஜெர்மானிய நண்பர் ஒருவர். அவரை நான் சந்தித்த மறுநாளே என்னிடம் அவர் இயேசு கிறிஸ்துவின் பெருமைகளை கூறினார். மேலும் என்னை இயேசுவை நம்பச்சொன்னார். ஒரு நாள் அவருடம் அவர் வீட்டிற்கு சென்ற பின் தான் தெரிந்தது, அங்கே அவர்கள் மிகப்பெரிய சமூகம் என்றும் உலகம் முழுவதும் இருந்து மக்கள் அந்த குழுவில் உள்ளனர் என்றும். அவர்கள் சொல்லும் கருத்து இதுதான், இயேசுவை நம்பினால் எந்த இன்னலிளிருந்தும் அவர் நம்மை காப்பார், உலகம் விரைவில் அழிய போகிறது (Judgement day) இயேசுவை நம்புவோர் காப்பாற்றபடுவார்கள், இயேசுவை தவிர எதன் மீதும் பற்றுகொள்ளாதே, விவிலியம் படி, சர்ச் என்பது வெறும் கட்டிடம்தான் அதை விட மக்களே முக்கியமானவர்கள், நேரடியாக இயேசுவை அணுக வேண்டும் பிற மனிதர்கள் (அல்லது சாமியார்கள்) மூலம் அல்ல, இவைகளை பின்பற்றுபவனே உண்மையான கிறிஸ்தவன். நண்பர் என்னை இயேசுவை நம்ம சொன்னது என்னை காப்பாற்றும் எண்ணத்தில். இந்த கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை எனவே விவிலியத்தில் என்னதான் இருக்கின்றது என்று தெரிந்து கொள்ளவே நான் படிக்க முயற்சித்தேன்.

 முதல் 5 பக்கங்களின் மேல் தொடர முடியாததற்கு காரணம் இரண்டு வாக்கியங்கள் " கடவுள் உலகில் அனைத்து ஜீவராசிகளையும் படைத்த பின் தன்னை போலவே உருவம் கொண்ட மனிதனை படைத்தார்", "உலகில் உள்ள அனைத்து செடிகொடிகளும் விலங்குகளும் மனிதனுக்கு உணவாகவே படைக்கப்படுள்ளது".
இவை இரண்டும் மனிதனின் ஆதிக்கச்சிந்தனையுடன் எழுதப்பட்டுள்ளது கடவுள் மனிதனை போல் தான் இருப்பார் என்று தோண்றியதால் விளைந்தவை. மனிதனுக்கு முன்னால் சில கோடி ஆண்டுகள் பூமியில் பல உயிரினங்கள் வாழ்ந்தும் அழிந்தும் போயிருக்கின்றன, அவை மனிதனுக்காக உணவாகும் பட்சத்தில் ஏன் நமக்கு முன்னாலேயே அழிந்தது?. இதனால் என்னால் மேலும் படிக்க முடியவில்லை.

இரண்டாவது The Brief History of Time , ஸ்டீபன் ஹவ்கிங்க்ஸ் என்ற விஞ்ஞானியால் எழுதப்பட்டது. அறிவியலை விரும்பும் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். பிரபஞ்சம்  எப்படி தோன்றியது? எப்படி இயங்குகிறது? என்ன ஆகும்? என்ற தலைப்பின் கீழ் ஆராய்ச்சி செய்த முக்கியமான விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி தொகுப்பு. விஞ்ஞானி அல்லாத பிற மனிதர்களும் படித்தறியும் வகையில் எழுத்தப்பட்டுள்ளது (12 படித்திருந்தாலே போதும்). கலிலியோ மற்றும் கோபெர்நிகசில் இருந்து தொடங்கி நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீன் வரை லேசாக அலசி விட்டு ஐன்ஸ்டீன் முதல் விரிவாக விளக்கப்படுகிறது. GUT என்னும் great unified theory ஐ கண்டுபிடிக்கும் முயற்சியை பற்றி விரிவாக உள்ளது. சுஜாதாவின் "கற்றதும் பெற்றதும்" மூலம் நான் இதை பற்றி அறிந்திருந்தேன். புவி ஈர்ப்பு விசை, மின் காந்த விசை மற்றும் அணு விசை அனைத்தையும் விளக்கும் ஒரே தியரியாக இருந்தால் அதுவே GUT . விஞ்ஞானிகள் இந்த இப்படி ஒரு தியரி விளக்கப்பட்டால் நமது பிரபஞ்சம் எதிர்காலத்தில் எப்படி மாறும்? அல்லது என்ன நிகழும்? என்பதை அறிய முடியும் என்கின்றனர். பிரபஞ்சம் எப்படி தோன்றியது? மற்றும் ஏன் தோன்றியது? போன்ற கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் (அதனால் கடவுள்ளையும் உணரலாம்) என்றும் நினைகின்றனர். முற்றில்லும் விஞ்ஞான பார்வையுடம் நாம் இதில் கடவுளை தேடலாம் அல்லது சில சைபி (science fiction) எழுதலாம். 
-தொடரும்
(GOD 's Debris அடுத்த பதிப்பில்)

Sunday 17 January, 2010

ஆயிரத்தில் ஒருவன்

பொங்கலுக்கு மிகவும் எதிர்பார்போடு திரைக்கு வந்திருக்கும் திரைப்படம். ரவுடிகளை விரட்டி கொலை செய்யும் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களம் அமைத்ததற்காகவே செல்வராகவன் பாராட்டப்படவேண்டும். கார்த்தி முதல் அழகம் பெருமாள் வரை இப்படத்தில் தோன்றும் அனைவரும் சிறப்பாகவே நடித்துள்ளனர். ராம்ஜி அவர்கள் ஒளிப்பதிவு கடல், மலை, காடு, பாலைவனம் என அனைத்தையும் அழகாகவே காட்டுகிறது. இர்ரம் அலி அவர்களின் உடை அமைப்பு இரண்டாம் பாதியில் சோழமன்னர்களை நமக்கு இயல்பாக அறிமுகப்படுத்துகிறது.
 G V பிரகாஷின் இசை பாடல்களை விட பின்னணியில் அதிர்கிறது. இது ஒரு Technically sound movie. போதுமான அளவு பாரட்டியாச்சு.
செல்வராகவனுக்காக முழு அணியும் இரண்டாண்டுகள் பொறுமையோடும் சிறப்பாகவும் தங்கள் வேலையை செய்துள்ளனர் ஆனால் அவர் ? கதை வித்தியாசமாக இருந்தாலும் திரைக்கதையும் பலமாக இருபது அவசியம். முதல் பாதியில் சோழ மன்னரின் மிஞ்சிய சாம்ராஜியத்தை தேடி பயணிக்கிற திரைக்கதை வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல் பாய்கிறது. இரண்டாம் பாதியில் சோழ சாம்ராஜியத்தை அடைந்துவிட்டதால் அதற்கு மேல் நகர மறுக்கின்றது. முதலில் கதை நகல்வதே தெரியவில்லை பின் கதை நகல்வதாய் தெரியவில்லை. முதல் பாதியும் இரண்டாம் பாதியும் இரு வேறு திரைப்படம் பார்ப்பது போல் உள்ளது. முதல் பாதி adventure இரண்டாம் பாதி  Historical documentry. இயக்குனரின் குழப்பம் இரண்டாம் பாதியில் பார்க்கும் அனைவரையும் தொற்றிக்கொள்கிறது. ரீமாவின் கதாபாத்திரம் இன்னும் சிந்தித்து எழுதி இருந்தால் குழப்பங்கள் குறைந்திருக்கும். கார்த்தியை கதாநாயகன் என்று நிலைநிறுத்துவதற்காக அமைத்த தேவை இல்லாத twist சற்று எருச்சல் தருகிறது. Indiana Jones, Apocalypto, Armour of the god, Mysterious Island, etc போன்ற பல திரைப்படங்களின் பாதிப்பும் Dan Brownநின் Old Brotherhood conceptடும் புகுத்தி உள்ளத்தால் மூச்சு முட்டுகிறது. எடுப்பதை விட எழுதுவதற்கு அதிக நேரம் செலவழிக்க வேண்டிய கதை. இதை முயற்சித்ததற்கே செல்வராகவனுக்கு பாராட்டுக்கள் மற்றும் அடுத்த திரைப்படத்தை சிறப்பாய் எழுத வாழ்த்துக்கள்.      

Sunday 27 December, 2009

கள்வனின் காதலி

தலைப்பை பார்த்து இது SJ சூர்யாவின் திரைப்படம் பற்றியது என்று யாரும் தயவு செய்து பதற வேண்டாம். நேற்று நான் படித்த திரு கல்கி அவர்களின் கள்வனின் காதலி புதினத்தை பற்றியோரு சிறு குறிப்பே. பொன்னியின் செல்வனையும், சிவகாமி சபதத்தையும் படித்தபின் இப்புதினத்தை படித்தால் நிச்சயம் என்னை போல் அனைவரும் ஏமாற்றம் அடைவீர்கள்.
இது சரித்திரப்புதினம் அன்று சமூகப்புதினம். கல்கி அவர்களின் நடையிலும், அவர் பாத்திரப்படைப்பிலும் சிறு குறையுமில்லை. இக்கதை கல்கி அவர்கள் வாழ்ந்த காலத்தில் நடப்பதால் (சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்) நாம் இக்கதையோடு அவ்வளவாக ஒன்ற முடிவத்தில்லை. பொன்னியின் செல்வனில் பல கதாபாத்திரங்களோடு விளையாடிய கல்கி அவர்களுக்கு இதில் உள்ளதோ பத்திற்கும் குறைவான கதாபாத்திரங்கள், அதில் மூவரை மட்டுமே கதை சுற்றி வருகிறது.
 இதில் காவல் அதிகாரியாய் வரும் சாஸ்த்ரி கதாப்பாத்திரம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, ஆனால் கமலபதி கதாப்பாத்திரம் அவ்வளவு அழுத்தமாக அமைக்கப்படவில்லை.
கல்யாணியோ சில இடங்களில் சிறப்பாகவும் சில இடங்களில் குழப்பமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. முத்தையன் துடிப்பும் வீரமும் உள்ள கல்கியின் வழக்கமான கதாநாயகன் பாத்திரம் ஆனால் புத்திசாலித்தனம் மட்டும் சிறுதும் இல்லாமல் போனது ஏனோ? வழக்கம் போல இதிலும் கல்கி காதலர்களை இறுதி வரை போராட விட்டு தோல்வியடைய வைக்கிறார்.

இக்கதை நாம் 50 வருடம் முந்தியோ அல்லது கல்கி பற்றி தெரியாமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படித்தால் ஒரு வேலை சிறப்பாக தோன்றலாம்.        

Saturday 12 December, 2009

பேருந்து

நான் சென்ற பதிப்பில் கேட்ட கேள்விக்கு பதிலளித்த நண்பர் பாலாஜிக்கு நன்றி. அவர் சிபாரிசு செய்த God 's Debris என்ற புத்தக்கத்தை நான் படிக்கத்தொடங்கிவிட்டேன்
ஆனால் இன்னும் முடிக்கவில்லை. என்னுடன் பணிபுரியும் கிறித்தவ நண்பருடன் "Free Will " பற்றியும் விவிலியம் பற்றியும் நான் சில முறை விவாதித்திருக்கிறேன். God 's Debris புத்தகத்திலும் அதே போன்ற விவாதம் உள்ளது an Intresting Coincidence !
நான் விவிலியத்தையும்,  God 's Debris ஐயும் படித்து முடித்தப்பின் இத்தலைப்பிற்கு
மீண்டும் வருவோம்.


பிற நாட்டுப் பொதுப்போக்குவரத்துகளை ஒப்பிட்டுப் பார்க்கையில்
பொது போக்குவரத்துசேவை நம் நாட்டில் சிலபல இன்னல்களுக்கு
இடையேயும்சிறப்பாக செயல்பட்டுக்கொண்டுள்ளது என்றே
எண்ணத்தொன்றுகிறது.
ஐரோப்பா நாடுகளில் பொது போக்குவரத்திற்கு ரயில்களே அதிகமாக பயன் படுத்தபடுகிறது. நம் ஊரை போல் அங்கே டிக்கெட் வழங்கப்படுவதில்லை (வாக்கியத்தை முழுவதுமாக படிக்கவும்) , வேறு விதமாக டிக்கெட் வழங்கப்படுகிறது.
ஒரு முறை வாங்கும் டிக்கெட் நாம் தொடர்ந்து 2 மணி நேரம் (எத்தனை முறை வேண்டுமானாலும்) உபயோகிக்கலாம். அது போக ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் என்றும் ஒரு ஜோன், இரண்டு ஜோன் ... என்றும்  டிக்கெட் வழங்கப்படுகிறது. அங்கு ஊர் concentric circle லாக ஜோன்கள் பிரிக்கப்படுள்ளது. பேருந்துகள் மிக குறைவாகவே பயன் படுத்தப்படுகிறது.
வார நாட்களில் ஒவ்வொரு ஐந்து அல்லது பத்து நிமிடத்திற்கு ஒரு ரயில் என்று திட்டமிடப்படுள்ளது. இதுவே வாரஇறுதி எனில் 15 முதல் 30௦ நிமிடம் வரையும், ஊருக்கு வெளியே என்றால் ஒருமணிநேரம்,வரையும் காத்திருக்கவேண்டும்.
இதை மேற்போக்காக பார்க்கையில் மிகச்சிறப்பாக தோன்றினாலும் நம் ஊரில் இதைவிட குறைவான நேரமே காத்திருக்க வேண்டும். மேலும் கட்டணம் நமது ஊரில் மிக மிக குறைவு. ஒரு ஜோன் ஒரு டிக்கெட் 1.85 ஐரோ அதாவது நம் பண மதிப்பின் படி 130 ரூபாய் (ஒரு லிட்டர் பெட்ரோல் 1 ஐரோ). 10 .03 க்கு ரயில் என்றால் நீங்கள் 10 .04 சென்றால் கட்டாயம் குறைந்தது 9 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். Taxi கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 5 ஐரோ. உங்களிடம் கார் இல்லை என்றால் வேறு வழியே இல்லை (ஆட்டோ கிடையாது). அங்கு ஒரே ஒரு ஆறுதல் சிட்டி எக்ஸ்பிரஸ் என்று பழைய பேருந்தின் முன் எழுதி ஒட்டி காசு பிடுங்க மாட்டார்கள்.

Thursday 10 December, 2009

கடவுள் வாழ்த்து

வணக்கம்,

              இது என் முதல் லைப்பூ , முதல் படைப்பு. எனெவே சொல் மற்றும் எழுத்துப்பிழைகளை தயவுகூர்ந்து மன்னிக்கவும். நான் என் செவியில் விழியில் படும் செய்திகளை என் கருத்துக்களோடு இவ்வலைப்பூவில் கலந்தளிக்கிறேன். உங்கள் உடன்பாடுகளையும் முரண்பாடுகளையும் விமர்சனங்களாக இங்கே பதிப்பிக்கவும். முதலில் கடவுள் வாழ்த்து ...








கடவுள் அல்லது இறைவனை வாழ்த்தும் முன் (சற்றே பெரிய) சிறு குறிப்பு : எனக்கு நான் ஆத்திகனா அல்லது நாத்திகனா என்று இன்னும் சரியாக விளங்கவில்லை காரணம் எனக்கு ஆத்திகனுக்கும் நாத்திகனுக்கும் உள்ள வேறுபாடு முதலில் விளங்க வெண்டும்.


நான் முதலில் என் நிலையை விளக்குகிறேன், நான் கடுவுளை நம்புகிறேன். கட உள் என்பதே கடவுள் (என் கருத்து) நாம் நம் உள்ளே கடந்து சென்று காண வேண்டிய ஒருவர். எனவே உறுதியாக கடவுள் நம் உள்ளேதான் அல்லது நம்மில் தான் இருக்கிறார்.


ராமன், இயேசு, புத்தர் அனைவரும் டவுளே ஏனெனில் அவர்கள் அனைவரும் தம் உள்ளே கடந்தவர்கள். நாமும் கடவுள் ஆகலாம் நம்மை நாம் கடவுள் என்று நம்பினால். நான் தான் கடவுள் என்னால் எல்லாம் முடியும் நான் அனைவரையும் ஆட்டி வைப்பேன் என்று இதை கருதுவது அபத்தம். நான் எப்படி கடவுளோ அது போல் பிற மனிதனும் கடவுளே. நாய் பூனை வாத்து அனைத்தும் கடவுளே.

மனிதன் எல்லாவற்றிலும் தன்னை உயர்வாகவும் பிற உயிர்களை தாழ்வாகவும் பார்த்தே பழகியதால் இதை ஏற்பது சிறிது கடினமாக இருக்கும். உண்மையில் இப்பிரபஞ்சத்தில் உலகம் ஒரு சிறு துகள் அதில் நாம் அனைவரும் சிச்சிறு துகள்கள். ஒரு தூசி மற்றொரு தூசி இலிவாக கருதுவது எவ்வளவு அப்பதமானது. 

மற்றபடி எனக்கு பிற சம்பிரதயங்களில் பெரிய நம்பிக்கை இல்லை. இதை படித்தவர்கள் என்னக்கு கூறவும் நான் ஆத்திகனா அல்லது நாத்திகனா என்று!
கடவுள் வாழ்த்து தொடர்ச்சி..

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.