Friday 16 July, 2010

மதராசபட்டினம்

இது விஜயின் படம் என்பதால் ஒரு முறை பார்க்கலாம் என்று சென்றேன் (என்ன.. ஒரு மாதிரி பாக்குறீங்க...  இவரு அவரில்லிங்க ...  பக்கத்தில இருக்க படத்த வேணா பாருங்க) கிரீடம் மற்றும் பொய் சொல்ல போறோம் இரண்டும் மிக வித்தியாசமான திரைப்படங்கள் அதிலிருந்தும் மிகவும் வித்தியாசமான முயற்சி (எப்படி என்று பின்னல் பார்க்கலாம் படிக்கலாம்) இந்த மதராசபட்டினம். 1945 சென்னை இல் நடக்கும் ஒரு காதல் கதை. கவர்னர் மகள் எமியும் மல்லியுத்த வீரனான சலவை தொழிலாளி பரிதியும் காதலிப்பதால் என்ன நடந்தது என்பதே கதை. படம் நிகழ்கால லண்டனில் 80 வயது எமி பாட்டியுடம் ஆரம்பிக்கிறது. உடல் நலக்குறைவால் வாடும் எமி இறப்பதற்கு முன் இந்தியாவில் தனக்கு ஒரு கடமை பாக்கியிருப்பதாய் கூறி சென்னை வருகிறார். அவரின் கடந்தகாலமாக படம்  விரிகிறது. சென்னையை மதராசபட்டினமாக காட்ட ஒரு பெரிய அணியே கடுமையாக உழைத்திருக்கிறது. அதற்கு தலைமை தாங்கிய செல்வகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பரிதியாக ஆர்யாவும் மொழிபெயர்பாளராக, ஹனிபாவும் அட்டகாசமாக நடித்திருக்கிறார்கள், எமியாக வரும் எமி ஜாக்சன் (மிஸ் டீன்) படம் முழுவதும் அழகாகவே தோன்றுகிறார். இனிமே அவர் தமிழ் படங்களில் நடிப்பாரா என்று தெரியவில்லை (நாம கொடுத்துவச்சது அவ்வளவுதான்).  பில்லாவாக இருந்தாலும், தூம்மாக இருந்தாலும், தமிழ் படமாக இருந்தாலும், மதராசபட்டினம்மாக இருந்தாலும் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு சிறப்பாகவே இருந்தது, இருக்கின்றது, இருக்கும். பின்னணி இசை சில சமயம் அதிர்கிறது சிலசமயம் அதிரவைக்கிறது ஜி வி பிரகாஷ் இன்னும் முயற்சித்திருக்கலாம். இரண்டு பாடல்கள் இனிமை. முதல் பாதி முழுவதும் சின்னச்சின்ன காட்சிகளாலும் இயல்பான வசனங்களாலும் அலங்கரிக்கப்படுள்ளது. இரண்டாம் பாதி ஏனோ இழுத்தடிக்கப்பட்டுள்ளது. பரிதி என்ன ஆனார் என்று அனைவருக்கும் தெரிந்த போதும் அதை காட்ட தாமதித்தது எருச்சல். 1945 ல் கதை நடந்தும் கதாநாயகன் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடாதது நிம்மதி அளிக்கிறது ஆனால் அதை தவிர பல கிலீசேக்கள் (இதற்கு தமிழ் வார்த்தை தெரிந்தால் கூறவும்) உள்ளன. விஜய் சிறைச்சாலை இயக்கிய பிரியதர்சனின் மாணவராம் விஜய் ஆனால் சிறைச்சாலையையும் இதையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது கூடாது. கதையை மட்டுமே ரீமேக்கிகொண்டிருந்த கோடம்பாக்கத்தில் திரைக்கதையையும்  ரீமேக்கலாம் என்று எடுத்துக்கட்டியுள்ளார் விஜய். படம் முடிந்ததும் Titanic என்றும் lagaan என்றும் காதில் ஒலித்தது. அவ்விரு படங்களுக்கும் இதன் கதைக்கும் சம்பந்தமேயில்லை என்றாலும் முக்கால்வாசி காட்சியமைப்பு அந்த படங்களிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது மீதி கால்வாசி வேறு படங்கள். இதனால் சின்ன சின்ன திருப்பங்களும் 5 நிமிடம் முன்பே அனைவரும் ஊகித்துவிடுகின்றனர். யதார்தமான நகைச்சுவைவே படம் முழுவதும் நம்மை உட்காரவைத்திருக்கிறது. Titanic என்றும் lagaan என்றும் கூறியவர்கள் அனைவரும் அதற்கு பல ஆண்டுகள் முன்பே திரைக்கு வந்த இந்தக்கதைக்கு மிகவும் ஒற்றுமையுள்ள பாரதிராஜாவின் நாடோடி தென்றலை மறந்தது வருத்தமளிக்கின்றது. பழைய மதராசுக்காகவும் புதிய எமிக்காகவும் ஒருமுறை இப்படத்தை அனைவரும் கண்டிப்பாக பார்க்கவும்.