Sunday 20 June, 2010

ராவணன்



அசோகவனம் என்று அராம்பித்து ராவணன் என்று தமிழிலும் ராவன் என்று ஹிந்தியிலும் வெளியாகியிருக்கும் திரைப்படம். ஏழு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியிருக்கும் மணிரத்தினத்தின் தமிழ் திரைப்படம் என்ற ஒரு காரணமே போதும் படத்தை முதல் நாள் பார்பதற்கு. கடைசியாக நான் பில்லா திரைப்படத்தை முதல் நாள் பார்த்தேன் (பார்க்க மட்டுமே முடிந்தது கேட்க முடியவில்லை எனவே பயந்து கொண்டேதான் சென்றேன் ). படம் ஆரம்பித்ததும் விசில் பறந்தது அனால்  சிலநிமிடங்களிலேயே அரங்கம் முழுவதும் அமைதி ஆனது ( இதை கின்னசில் பதியலாம்). படம்  முதல் frameலேயே கதைக்குள் நுழைந்தது.

 திருநெல்வேலியில் உள்ள ஒரு தாதா வீராவை பிடிக்க நினைக்கும் போலீஸ் அதிகாரி தேவ், வீராவின் தங்கையின் கல்யாணத்தில் புகுந்து வீராவை பிடிக்க நினைக்கிறார். வீரா தப்பிவிடுகிறான் அவன் தங்கை போலீசில் மாட்டி சீரழிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். பழி வாங்க தேவின் மனைவி ராகினியை கடத்தி வரும் வீரா, அவர்களை தேடி படையோடு வரும் தேவ், காட்டிற்குள் என்ன ஆனார்கள் என்பதே கதை. ராகினி வீராவை தவறாக எண்ணி பின் அவன் நியாயங்களை உணர்ந்து பின் யார் நல்லவர் யார் தீயவர் என்று புரியாமல் குழம்புகிறார். 

வீராவாக விக்ரம், தேவாக ப்ரித்வி, ராகினியாக ஐஸ்வர்யா ராய் மேலும் பிரபு, கார்த்திக், ப்ரியாமணி என்று நீள்கிறது நட்சத்திர பட்டியல். படத்தில் அனைவரும் தங்கள் பங்கை மிக சிறப்பாகவே செய்துள்ளனர். படத்தில் மிகவும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருப்பது சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு. இரு படகுகள் மோதுவதை நீருக்கு அடியிலிருந்து காட்டி இங்கெல்லாமா காமெராவை வைக்க முடியும் என்று நம்மை வியக்க வைக்கிறார்  மற்றும் பெரும்பாலான sceneகளில் subjectடை out of focusஸில் வைத்து வேறு பொருளை focus செய்திருப்பதும் மிக வித்தியாசமான முயற்சி. மணிரத்தினத்தின் திரைக்கதையையும் ரஹ்மானின் இசையையும் பற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை.

இசை, நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு என்று அனைத்தும் நன்றாக இருக்கும் பொழுதும் எதோ ஒன்று குறைகிறது. இக்கதையை தூக்கத்தில் இருக்கும் குழந்தை கூட சொல்லிவிடும் இது ராமாயணம் என்று, ஆனால் அதை மக்களுக்கு விளக்க ஏன் பகீரதப்பிரயத்தினம் செய்கின்றனர் என்று புரியவில்லை. தளபதி படத்தில் அதை மகாபாரதம் என்று யாரும் விளக்கவில்லையே மேலும் இப்படத்தின் பெயரே போதுமே. படத்தில் அனைவரும் 10 தலை என்றும் 14 நாள் கடத்தல் என்று கூறுகிறனர். படத்தில் எத்தனை 10 தலை மற்றும் 14 நாள் வருக்கிறது என்று கூறுபவர்களுக்கு தங்க காசு பரிசு அளிப்பார்கள் போல. கார்த்திக் செய்யும் குரங்கு சேட்டைகளை பார்க்கையில் இது மணிரத்தினத்தின் திரைப்படமா என்று எண்ண வைக்கிறது. சுகாசினியின் வசனம் படம் பார்பவர்களை  முட்டாள்களாக கருதி அனைத்தையும் விளக்கி கொண்டே செல்கிறது. வீரா ராகினியை கடத்தும் இடத்தில வரும் கழுகை (ஜடாயு) காட்டியது சிறந்த திரைக்கதை அமைப்பு ஆனால் அதை மிஞ்சி விடுகிறது வளவளா வசனம். 

கோர காட்சிகளையும் கொடூரங்களையும் காட்ட பல வாய்ப்பிருந்தும் தவிர்த்து எளிமையாய் காட்டியிருப்பது மணிரத்தினத்திடம் பிற இயக்குனர்கள் கற்க வேண்டிய பாடம். மிக சிறந்த திரைப்படம் ஆக அனைத்து தகுதி இருந்தும் எதோ missing . அந்த எதோ சுஜாதா.