Friday 9 April, 2010

கடவுள்

நான் கடந்த இரு மாதங்களில் படித்த (அல்லது படிக்க முயற்சித்த) புத்தகங்கள் GOD 's Debris , The Brief History of Time , விவிலியம் (ஐந்து பக்கங்கள் மட்டும்). மூன்றுக்கும் உள்ள ஒற்றுமை கடவுள் தேடல் , வேற்றுமை வெவ்வேறு வழிகள் (நான் வழிகள் என்று மதங்களை குறிப்பிடவில்லை).

முதலில் விவிலியம் , நான் விவிலியம் படிக்க காரணம் எனது ஜெர்மானிய நண்பர் ஒருவர். அவரை நான் சந்தித்த மறுநாளே என்னிடம் அவர் இயேசு கிறிஸ்துவின் பெருமைகளை கூறினார். மேலும் என்னை இயேசுவை நம்பச்சொன்னார். ஒரு நாள் அவருடம் அவர் வீட்டிற்கு சென்ற பின் தான் தெரிந்தது, அங்கே அவர்கள் மிகப்பெரிய சமூகம் என்றும் உலகம் முழுவதும் இருந்து மக்கள் அந்த குழுவில் உள்ளனர் என்றும். அவர்கள் சொல்லும் கருத்து இதுதான், இயேசுவை நம்பினால் எந்த இன்னலிளிருந்தும் அவர் நம்மை காப்பார், உலகம் விரைவில் அழிய போகிறது (Judgement day) இயேசுவை நம்புவோர் காப்பாற்றபடுவார்கள், இயேசுவை தவிர எதன் மீதும் பற்றுகொள்ளாதே, விவிலியம் படி, சர்ச் என்பது வெறும் கட்டிடம்தான் அதை விட மக்களே முக்கியமானவர்கள், நேரடியாக இயேசுவை அணுக வேண்டும் பிற மனிதர்கள் (அல்லது சாமியார்கள்) மூலம் அல்ல, இவைகளை பின்பற்றுபவனே உண்மையான கிறிஸ்தவன். நண்பர் என்னை இயேசுவை நம்ம சொன்னது என்னை காப்பாற்றும் எண்ணத்தில். இந்த கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை எனவே விவிலியத்தில் என்னதான் இருக்கின்றது என்று தெரிந்து கொள்ளவே நான் படிக்க முயற்சித்தேன்.

 முதல் 5 பக்கங்களின் மேல் தொடர முடியாததற்கு காரணம் இரண்டு வாக்கியங்கள் " கடவுள் உலகில் அனைத்து ஜீவராசிகளையும் படைத்த பின் தன்னை போலவே உருவம் கொண்ட மனிதனை படைத்தார்", "உலகில் உள்ள அனைத்து செடிகொடிகளும் விலங்குகளும் மனிதனுக்கு உணவாகவே படைக்கப்படுள்ளது".
இவை இரண்டும் மனிதனின் ஆதிக்கச்சிந்தனையுடன் எழுதப்பட்டுள்ளது கடவுள் மனிதனை போல் தான் இருப்பார் என்று தோண்றியதால் விளைந்தவை. மனிதனுக்கு முன்னால் சில கோடி ஆண்டுகள் பூமியில் பல உயிரினங்கள் வாழ்ந்தும் அழிந்தும் போயிருக்கின்றன, அவை மனிதனுக்காக உணவாகும் பட்சத்தில் ஏன் நமக்கு முன்னாலேயே அழிந்தது?. இதனால் என்னால் மேலும் படிக்க முடியவில்லை.

இரண்டாவது The Brief History of Time , ஸ்டீபன் ஹவ்கிங்க்ஸ் என்ற விஞ்ஞானியால் எழுதப்பட்டது. அறிவியலை விரும்பும் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். பிரபஞ்சம்  எப்படி தோன்றியது? எப்படி இயங்குகிறது? என்ன ஆகும்? என்ற தலைப்பின் கீழ் ஆராய்ச்சி செய்த முக்கியமான விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி தொகுப்பு. விஞ்ஞானி அல்லாத பிற மனிதர்களும் படித்தறியும் வகையில் எழுத்தப்பட்டுள்ளது (12 படித்திருந்தாலே போதும்). கலிலியோ மற்றும் கோபெர்நிகசில் இருந்து தொடங்கி நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீன் வரை லேசாக அலசி விட்டு ஐன்ஸ்டீன் முதல் விரிவாக விளக்கப்படுகிறது. GUT என்னும் great unified theory ஐ கண்டுபிடிக்கும் முயற்சியை பற்றி விரிவாக உள்ளது. சுஜாதாவின் "கற்றதும் பெற்றதும்" மூலம் நான் இதை பற்றி அறிந்திருந்தேன். புவி ஈர்ப்பு விசை, மின் காந்த விசை மற்றும் அணு விசை அனைத்தையும் விளக்கும் ஒரே தியரியாக இருந்தால் அதுவே GUT . விஞ்ஞானிகள் இந்த இப்படி ஒரு தியரி விளக்கப்பட்டால் நமது பிரபஞ்சம் எதிர்காலத்தில் எப்படி மாறும்? அல்லது என்ன நிகழும்? என்பதை அறிய முடியும் என்கின்றனர். பிரபஞ்சம் எப்படி தோன்றியது? மற்றும் ஏன் தோன்றியது? போன்ற கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் (அதனால் கடவுள்ளையும் உணரலாம்) என்றும் நினைகின்றனர். முற்றில்லும் விஞ்ஞான பார்வையுடம் நாம் இதில் கடவுளை தேடலாம் அல்லது சில சைபி (science fiction) எழுதலாம். 
-தொடரும்
(GOD 's Debris அடுத்த பதிப்பில்)

1 comment: